போராட்டக்காரர்களை கைக்குழந்தைகள் என கூறியவர் பேச்சுக்கு அழைப்பது நகைச்சுவையானது – ஹரிணி

போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுவதாகவும் எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமே பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹரிணி அமரசூரிய கூறினார்.

ஆகவே பொதுமக்கள் தற்போது கற்பிக்கும் முக்கியமான அரசியல் பாடத்தை அரசாங்கம் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார்.