சமூக சேவை நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் மூலம் வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

(ஏ.பி.அப்துல் கபூர்)

அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு “வாழ்வில் வசந்தம்” கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றோருக்கான வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் இரண்டாம் கட்ட விட்டு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு அண்மையில் (11) நிந்தவூரில் நடைபெற்றது

பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ. எம். நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீட்டுக்கான நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலக அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் ஆலோசகர் கலாபூஷணம் எஸ். அஹமது, செயலாளர் ஏ. புஹாது, கிராம சேவை உத்தியோகத்தர் எம்.பவாஸ், உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர்-8 மற்றும் நிந்தவூர்-23ம் பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வீடு வசதியற்ற இரண்டு பயனாளிகளுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ. ஓ. லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும் முன்னாள் சுங்க அத்தியட்சகருமான சீ. ஓ. லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் அல்- ஹாஜ் ஓ.எல்.சப்ரி இஸ்மத் அவர்களின் குடும்ப நிதி பங்களிப்புடன் இந்த இரண்டு வீடுகளும் நிர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்படுகின்ற இரண்டு ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு நிறைவேறுவதாக பெஸ்ட் ஒப் யங் அமைப்பு தெரிவிக்கின்றது.