இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து இடம்பெயர்

(வாஸ் கூஞ்ஞ)

இலங்கை நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் வட பகுதி மக்கள் மன்னார் பாக்குநீர் வழியாக இந்தியாவுக்கு தங்கள் குடும்பங்களுடன் அகதிகளாக இடம்பெயரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்து.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 19 பேர் அதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்ற இவ்வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் படகு ஒன்றில் மன்னாரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) அதிகாலை தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு போய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து மெரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் தற்போது இலங்கை மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட மேலும் 10 பேர் மணல் தீடையில் இறங்கியுள்ளதாகவும்

ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) மட்டும் ஒரே நாளில் 19 இலங்கை அகதிகள் தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அகதிகளாகச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தீடையில் நின்றவர்களை தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் 10 பேரை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அகதிகளாகச் சென்ற இவ் இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.