போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் –  பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவிப்பு

(நிந்தவூர் நிருபர்)

இன்று பொருளாதார நெருக்கடியின் காரணமாக வீதியில் இறங்கி போராடுகின்ற மக்களின் உணர்வுகளை மதித்து நான் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன். இன்று வீதியில் இறங்கி போராடுபவர்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை பாதுகாப்பதற்கோ அல்லது எதிர் கட்சியினரினை ஆட்சியில் அமர்த்துவதற்கோ அல்ல மாறாக இவர்கள் போராடுவது இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் உண்மையானதும் உணர்வுபூர்வமானதமான இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதோடு இன்றிலிருந்து நான் பாராளுமன்றத்தில் நடுநிலையாக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளேன்.

நான் ஒரு ஊடகவியலாளனாக இருந்து மக்கள் ஆணை மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அன்றிலிருந்து கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதனை தொடர்ச்சியாக நான் பாராளுமன்றத்தினுள்ளும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து வந்துள்ளேன்.

சமகால அரசியல் முறைமையில் நான் கொண்ட அதிருப்தியினை இந்த பாராளுமன்றத்தில் பல தடவைகள் பதிவு செய்துள்ளேன். அரச இயந்திரத்தின் நல்லவை தீயவை பற்றியெல்லாம் தெளிவாக தனது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளேன். ஒரு மக்கள் பிரதிநிதியாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் நான் முனைப்புடன் செயலாற்றி வந்துள்ளேன்.

அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் என அனைத்து புறங்களிலும் எனது மக்களின் பிரச்சினைகளைப் எடுத்துச்சென்று அவற்றை தீர்வை நோக்கியும் நகர்த்தியும் உள்ளேன். தீர்வே விடிவு என்ற செயல் வீச்சோடு எனது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அடைந்துள்ள துயரங்களை ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் நன்கு அறிவேன். மக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த போராட்டம் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை நமது நாட்டில் தோற்றுவிக்க வேண்டும் என்ற சீரிய பாய்ச்சலுடன் நகர்கிறது.

பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் மிகச்சரியான எந்த ஒரு முன்மொழிவுகளும் இதுவரையில் முன்வைக்கப் படவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். அதனால் நான் இன்று எனது மக்களின் பக்கமாக நின்று பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளேன்.

மிகத் துரிதமாக நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் அப்போதே நாட்டினதும் மக்களினதும் துயர் களையப்படும் என்று நான் நம்புகின்றேன். அதற்கான கலாசாரத்தை உருவாக்குவதற்கு இந்த பாராளுமன்றம் செயலாற்ற வேண்டும். இந்த நாட்டில் இருக்கின்ற மிகப் பெரிய அபத்தம் ஆளும் கட்சியாக இருந்தால் செய்கின்ற எல்லாவற்றையும் சரி எனச் சொல்வதும் எதிர் கட்சியாக இருந்தால் செய்கின்ற எல்லாவற்றையும் பிழை எனச் சொல்வதுமான நடைமுறையாகும்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது ஒரு சாராரின் தவறு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று பாதையில் நிற்பது எந்த கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல. இன்று பாதையில் நிற்பவர்கள் எந்த கட்சியினையும் முன் நிறுத்துவதற்காக போராடுபவர்கள் அல்ல. இன்று பாதையில் நின்று போராடுபவர்கள் சாதாரண பொதுமக்கள் ஆகும். இவர்கள் இந்த நாட்டில் இன்று கஷ்டத்தோடு வாழ்பவர்கள். துக்கத்தோடும் துயரத்தோடும் வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பசியின் மூலம் வீதிக்கு இறங்கி போராடுபவர்கள்.

இவர்கள் இன்று போராடுவது இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு ஆகும். நான் இன்று இந்த பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது வீதியில் இறங்கி போராடுகின்ற மக்களை பாராட்டுவதற்கு ஆகும். நீங்கள் இன்று இந்த பணத்தை என்னிடம் நீட்டுவதை விட இந்த பணத்தை டயஸ்போரா விடம் ஒப்படையுங்கள்(பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு தாள் பணத்தினை குறித்த உறுப்பினரிடம் கையளிக்கும் போது) அமெரிக்காவினதும் இந்தியாவினதும் அஜந்தாவில் செயற்படுகின்றவர்களிடம் இந்த பணத்தை நீங்கள் கொண்டு கொடுங்கள்.

நான் இன்று பேசுவதெல்லாம் வீதியில் இறங்கி போராடுகின்ற மக்களுக்கு சார்பாகவே ஆகும். நான் எனது மக்களுக்காக பேசுகின்ற போது அதனை எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தடுக்க முற்படுவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும் எனவும் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.