பொதுமக்கள் போராட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளரின் அறிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒரு குழு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துகிறது, அவர்கள் அமைதியாக கலைந்து செல்கிறார்கள், மற்ற குழு வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினர் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன உறுதியளித்தார்.

எவ்வாறாயினும், போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் தயங்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

முழுமையான அறிக்கை

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், சமயப் பெருமக்கள், பெற்றோர்கள், நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுக்கும்,

முதலில், அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் விலகி இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “அமைதியான பிரச்சாரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்று தோன்றினாலும், இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவிட்டு அமைதியான முறையில் கலைந்து செல்கின்றனர், மற்றொரு குழுவினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, முக்கிய சாலைகள் மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர்.

அவசர நிலை அமுலில் உள்ள பின்னணியில், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைதிப் போராட்டங்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் செயல்பட்டு, அமைதியை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ள பாதுகாப்புப் படைகளை மோசமான நிலையில் அணுகுவது, தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற வன்முறைத் தன்மையால் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்றுவிட்டதையே காட்டுகிறது.

சில பகுதிகளில், போராட்டக்காரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று, வீடுகள் மற்றும் கடைகள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதேவேளை, மேலும் பல குழுக்களும் நேற்று (4) திட்டமிட்ட திருட்டில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக வீடுகளை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்களின் வீடுகளும் திருடர்களால் உடைக்கப்பட்ட நிகழ்வுகள் பதிவாகியுள்ளது என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன். பாதுகாப்பு அமைச்சு, பொதுப் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், மற்றும் இலங்கைப் பொலிஸாரும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இந்த போராட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், வன்முறைச் செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் செயல்படுவார்கள் என்றும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தயங்க மாட்டார்கள் என்றும் நான் மேலும் வலியுறுத்துகிறேன். இறுதியாக, பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், இந்த நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமை, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீயிட்டு எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அமைதியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். பல்வேறு நோக்கங்களுக்காக வன்முறையைத் தூண்டுபவர்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக, உங்கள் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய  நான் வாழ்த்துகிறேன்