ஜனாதிபதி தனது வீட்டில் இருக்கும்போதே பேருந்திற்கு தீ வைக்கப்பட்டது – திலும் அமுனுகம

நுகேகொட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுகேகொட ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக பேருந்துக்கு தீ வைத்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஜனாதிபதி தனது வீட்டில் இருக்கும்போது தான் இந்த சம்பவம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்.

ஏனெனில், இது உண்மையில் பயங்கரவாதச் செயற்பாடாகும். எனினும், இவர்களுக்கு எதிராக எவ்வாறு வழக்குத் தொடரலாம் என்பதை பொலிஸாரே ஆதாரங்கள் கொண்டு மேற்கொள்வார்கள்.

ஆனால், கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என்று நாம் கூறப்போவதில்லை.

ஆர்ப்பாட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமையுள்ளது. எனினும், இதனால் அரச சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் அது என்னைப் பொறுத்தவரை பயங்கரவாத செயற்பாடாகவே கருதப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.