பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு கிழக்கு ஆளுநர் பதில்:

(ஹஸ்பர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் சிங்களவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டானது சிங்களம் மற்றும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 31.12.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 37150 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாகவும் அதில் 82 சிங்கள குடும்பங்கள் எனவும் மாகாண காணி ஆணையாளர் அலுவலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 36958 தமிழ் குடும்பங்கள். மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 110 ஆகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். கிழக்கு மாகாணத்தின் அப்பாவி மக்கள் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எமது மாகாணத்தில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு நான் சென்றுள்ளேன்.அந்த பாராளுமன்ற உறுப்பினர் வராத கிராமங்களுக்கும் சென்றுள்ளேன்.மிகவும் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக காணிகளை இழந்தவர்கள் மற்றும் பல்வேறு சமூக அநீதிகளுக்கு உள்ளானவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்தோம். அந்த ஆணையகத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பிரதேச செயலக மட்டத்தில் அமுல்படுத்தும் பணியை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.இந்த ஆணைக்குழு தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்.

இந்த வேலைத்திட்டம் தற்போது மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது இதனை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் பல வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என இந்த பாராளுமன்ற உறுப்பினர் கூச்சலிடுகின்றார். இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது தமிழ் மக்களும் எம்முடன் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நாங்கள் சிங்களவர்களா, தமிழர்களா, முஸ்லீம்களா என்று பார்க்காமல் அனைவரும் இலங்கையர்கள் என்றே நினைக்கிறோம். அப்படி ஒரு பிரிவினையை உருவாக்க நாங்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை, அவ்வாறு செய்ய மாட்டோம்

கிழக்கு மாகாணத்தை மீண்டும் ஈழத்தின் அபிலாஷைகளுக்கு இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறானதொரு இடத்திற்கு இந்த நாட்டைத் தள்ள வேண்டாம் என இந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக தமிழ் மக்களிடையே மனிதாபிமானமற்ற கனவுகளை உருவாக்க வேண்டாம் என நான் இந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் நான் மிகவும் வேண்டிக்கொள்கின்றேன் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்தும் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.