எமது உள்ளுர் படைப்புகளை ஊக்கப்படுத்த விநியோகத்தர்கள் முன்வர வேண்டும்; ரிச்சட் திரைப்பட இயக்குனர் பிறேமலக்சன்

(சுமன்)

தென்னிந்தியத் திரைப்படத்துரைக்கு விநியோகத்தர்களின் பங்கு எவ்வாறிருக்கின்றதோ அதேபோன்று எமது உள்ளுர் படைப்புகளையும் ஊக்கப்படுத்த விநியோகத்தர்கள் முன்வர வேண்டும் என ரிச்சட் திரைப்படத்தின் இயக்குனர் பிறேமலக்சன் தெரிவித்தார்.

கடந்த மார்ச 24ம் திகதி வெளியாகிய ரிச்சட் திரைப்படத்திற்கு மக்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூறும் முகமாகவும், எதிர்வரும் 03ம் திகதி செல்லம் திரையரங்கில் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளமை தொடர்பாகவும் இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது படைப்பில் உருவான ரிச்சட் திரைப்படம் சாந்தி மற்றும் செல்லம் திரையரங்குகளில் கடந்த மார்ச் 24ம் திகதி வெளியிடப்பட்டது. திரையரங்குகளுக்கு வருகை தந்து அன்றைய தினம் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள். அதேபோன்று விமர்சனங்கள் எழுதிய விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிள்றேன்.

இத்திரைப்படத்தினைக் காணத் தவறியவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி மாலை 05.15மணிக்கு செல்லம் திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று கொழும்பிலுள்ள சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் 10ம் திகதி கொழும்பிலும் இதனைத் திரையிடத் தீர்மானித்துள்ளோம்.

இத்திரைப்படத்திற்கு மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்ற ஆதரவைப் போன்று எதிர்வரும் 03ம் திகதி செங்கலடியிலும், 10ம் திகதி கொமும்பிலும் மக்கள் தங்கள் ஆதரவினைத் தரவேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள உறவுகள் இவ்வாறான படைப்புகளை வெளிநாடுகளிலுள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கும் ஒத்துழைப்புத் தரவேண்டும். எமது இளைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாறான செயற்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் தென்னிந்தியத் திரைப்படத்துரையினை இத்தனை உயரத்திற்குக் கொண்டு சென்றது விநியோகஸ்தர்களின் செயற்பாடுகள் தான் அந்த வகையில் எமது உள்ளுர் படைப்புகளையும் விநியோகம் செய்வதற்கு விநியோகஸ்தர்கள் முன்வந்து அடுத்த அடுத்த படைப்புகளை நாங்கள் மேற்கொள்வதற்கு எங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் எமது இந்தப் படைப்பின் வெளிநாட்டுத் திரையிடல் உரிமத்தினை லோகன் என்டர்பிரைஸ் என்னும் சிங்கப்பூர் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்திற்கு மே மாதம் 01ம் திகதியில் இருந்து உரிமத்தை வழங்கவுள்ளோம். அத்துடன் மட்டக்;களப்பில் வெளியாகியிருந்த ஆபத்தாண்டவன் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நோக்கத்திற்கமைய நாங்கள் எங்கள் படைப்புகளையும் யுடியூப் தளத்தில் வெளியிடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.