திருகோணமலை மாவட்டத்தில் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம்.

(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தில் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சுவாச நோயியல் பிரிவின் வைத்தியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காசநோய் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:

திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 27 புதிய காச நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் 2021ஆம் ஆண்டு 100 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

மேலும் சுவாச நோயினால் ஏற்படும் காச நோயானது திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி,கிண்ணியா, மூதூர் மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசத்திலே அதிகளவான நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்.

காசநோயாளிகள் இனம் காணப்படுவதில் பெறும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்த வைத்தியர் சுரேஷ்குமார் காச நோயாளிகள் இருக்கும் இடத்தில் பரிசோதனைக்காக வைத்தியர் குழு சமூகமளிக்கும் நிலையில் நோயாளிகள் முன்வந்து காசநோய்க்கான நோய் அறிகுறிகளை சொல்லாத வரை நோயாளிகளை இனம் காண்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

காசநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக தெளிவுபடுத்தும் இடத்தில் குறித்த காசநோயை இனங்கண்டு அதற்கான சிகிச்சையிணையும் நோயாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலகுவாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திருகோணமலை பதவிசிறிபுர போன்ற பிரதேசத்தில் காசநோய் தினத்தை முன்னிட்டு பிரதேச ரீதியாக தெளிவுபடுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும்,இவ்வாறு காசநோயினால் பெரிதும் நோய் தாக்கத்திற்கு உள்ளாவது சிறுநீரக நோயாளிகள் மற்றும் சலரோக நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறித்த காசநோயின் அறிகுறிகளாக இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், உடல் மெலிவு, பசியின்மை மற்றும் பிற்பகலின் பின்னர் ஏற்படுகின்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் திருகோணமலை தள வைத்தியசாலையில் அமைந்துள்ள காசநோய் சிகிச்சை பிரிவில் இலகுவாகவும், இலவசமாகவும் சிகிச்சை பெற முடியும் எனவும், காச நோயானது முற்றுமுழுதாக குணப்படுத்தக்கூடிய நோயாக இருப்பதனால் சமூகத்தின் மத்தியில் எவ்வித அச்சமுமின்றி சிகிச்சை பெறுமாறும் காசநோய் தொடர்பான விழிப்புணர்வினை பெறுமாறும் இதன்போது வைத்தியர் சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.