மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து

ஜனநாயகத்தை உறுதி செய்ய மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மிகவும் கடினமான மற்றும் முக்கிய தருணத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு துணிச்சலான நடவடிக்கை என விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார்.