இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை இடமாற்றாதீர்கள் என கோரிக்கை முன்வைப்பு

(பாறுக் ஷிஹான்)

இளைஞர் அபிவிருத்தி பணிகளில் இன மற்றும் பிரதேச வாதங்கள் எதுவுமின்றி தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டுவரும் சாய்ந்தமருது பகுதியிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை அம்பாறை நகரத்திற்கு கொண்டு செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிஹான் சாலீன்,இளைஞர் கழகங்களின் சம்மேளன அம்பாறை கிளையின் பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பிரதிநிதி சிப்னால் அஷீஸ் ,கிழக்கின் கேடயம் அமைப்பின் செயற்பாட்டாளர் சக்கீ சைன் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர்சபை உறுப்பினர் ஹிஸாம் ஏ .பாவா ஆகியோர் இணைந்து மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் அங்கு தெரிவித்ததாவது

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து முறையாக இயங்கிவரும் நிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் சிலர் ஈடுபட்டு வருவதையிட்டு மிகுந்த மன வேதனை அடைகின்றோம். சில உத்தியோகத்தர்களின் சுயநல தேவைகளுக்காக இளைஞர்களின் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்க முடியாது. தனிப்பட்ட போக்குவரத்து மற்றும் இதர காரணங்களை சுட்டிகாட்டி தற்போது நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சில சுயநலம் கொண்ட உத்தியோகத்தர்களுக்காக எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் இயங்குகின்ற குறித்த அலுவலகம் ஏன் மாற்றப்பட வேண்டும் ? நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வு பற்றியும் இளைஞர்களின் அபிவிருத்தி பற்றியும் மக்களும் அரசாங்கமும் கருத்து கூறிவரும் இச்சூழ்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே நீண்டகாலமாக சாய்ந்தமருதில் இயங்கிவரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ள வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் ,இவ்விடயத்தில் நீதியை பெற்றுத்தரவேண்டும் என்றனர்.