ஒரு மாத காலத்திற்கு தெரு மின் விளக்குகளை அணைக்கும் பசில் ராஜபக்சவின் திட்டத்திற்கு கல்முனை மாநகர சபை முன்மாதிரி

(பாறுக் ஷிஹான்)

இலங்கை நாட்டில் மிகவும் இக்கட்டடான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் மின்சாரத்தடை எரிபொருள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்
இவ்வாறான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் முன்மாதிரியான செயற்பாட்டின் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் பராமரிப்பின் கீழுள்ள பொது விளையாட்டு மைதானங்கள் மையவாடிகள் சில வீதிகளில் ஒளிர்கின்ற மின்குமிழ்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆலோசனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய மருதமுனை சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை சாய்ந்தமருது கல்முனை நகர பகுதிகளில் உள்ள பகுதிகளில் வழமையாக ஒளிர்கின்ற மின்குமிழ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி தேவைக்கேற்றவாறு பயன்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் குறித்த தெரு மின் விளக்குகளை அணைப்பதற்கு அது தொடர்பில் உரிய பொறுப்பாளர்களுக்கும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை நிந்தவூர் பிரதேச சபையும் மேற்குறித்த தெரு விளக்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் பொது மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளன.