தலவாக்கலையில் பாரிய ஆர்ப்பாட்டம்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான ஆசிரியரின் குடும்பத்தினருக்கு நீதிகோரியும் நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலை பொது மக்களின் வணக்கஸ்தலமாக பெற்று தருமாறு கோரியும் தலவாக்கலை நகர வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்கள் நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சுற்று வட்டத்திற்கு முன்பாக இன்று (8) செவ்வாய்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தலவாக்கலை நகர வர்த்தகர்கள் ,பிரதேச மக்கள், சர்வமத தலைவர்கள் என அனைத்து இன மக்களும் ஒன்று சேர்ந்து தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். 200 வருட பழைமை வாய்ந்த தலவாக்கலை லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவில் அருகாமையில் அடையாளமாக திகழ்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தனிநபரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலை பொது மக்களின் வணக்கஸ்தலமாக பெற்று தருமாறு கோரியும் இந்த கடையடைப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

200 வருட கால பழமை வாய்ந்த ஆலமரத்தை முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் முறையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமல் பாதுகாப்பற்ற முறையில் வெட்டி அகற்றியதன் காரணமாக பலியான ஆசிரியருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். குறித்த சம்பவத்தை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்த அரசு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆசிரியரின் உயிரிழப்பை அடுத்து அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மரம் வெட்டும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 200 வருட பழைமை வாய்ந்த குறித்த ஆலமரம் தற்போது முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

இதனை முழுமையாக வெட்டி அகற்றுவதற்கு அனுமதி வழங்கியது யார்? குறித்த வழிப்பிள்ளையார் கோவிலை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் எனவே அதனை பொது மக்களின் வணக்கஸ்தலமாக பெற்று தருமாறு கோரியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் ஆலமரத்தை முழுமையாக வெட்டி அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பி பதாகைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100 ற்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.

கடந்த (21) திகதி நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய குறித்த ஆசிரியர் உயிரிழந்தார். தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் பிரபல கணித ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த (1) ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகர சுற்று வட்டத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர், தலவாக்கலை லிந்துலை நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை,வனவள பாதுகாப்பு திணைக்களம்,காவல்துறையினர், ஸ்ரீலங்கா டெலிகொம்,பிரதேச செயலகம், கோவில் உரிமையாளர் போன்ற பலரும் சம்பவம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.