அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா விடுத்த அழைப்பை வரவேற்கின்றோம்; கூட்டமைப்பு

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்பிற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஜெனீவாவில் இந்தியா கூறியிருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான உரையாடலின் போது இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே இதனை தெரிவித்தார்.

இந்நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும், நீதியுடனும் வாழ, 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது உட்பட அதிகாரப் பகிர்வை அவர்கள் அடைய வேண்டும் என இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் அறிவித்துள்ளது என்றார்.