சௌபாக்கியா திட்டத்தின் கீழ் கோழி குஞ்சு உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (03) நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் அட்டப்பள்ளம் கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பு வேலைத்திட்டம் தெரிவுசெய்யப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சங்கங்கள் ஊடாக இந்த கோழிக்குஞ்சு உற்பத்தி செய்யும் எந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம் .அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவி திட்ட உபகரணங்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வின்போது உளவளத்துணை தொடர்பாக பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது தொடர்பாக உளவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். தஹ்லான் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ எம் சுல்பிகா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவை உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட சௌபாக்கியா உற்பத்தி கிராம பயனாளிகளும் கலந்துகொண்டனர்.