பல்லின மக்களும் ஒற்றுமையாக பங்குகொண்ட இறக்காமம் பிரதேச கலை இலக்கிய விழா – 2021 நிகழ்வுகள் !

(நூருல் ஹுதா உமர்)

2021 ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழா, கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் இறக்காமம் கலாசார அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றது.

பிரதேச மட்டத்தில் இடம்பெற்ற கலை இலக்கியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவில் வெற்றியீட்டிய கலைஞர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இறக்காமம் கலாச்சார அதிகார சபைக்கு பங்காற்றிய கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் எஸ்.எல். நிஸார் (பிரதி கல்வி பணிப்பாளர்), பொருளாளர் யூ.எல். ஜிப்ரி (ஆசிரியர்) ஆகியோருக்கு விஷேட கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கிய மூத்த கலைஞர் கலாபூசனம் பி.டி. யாசீன்பாவா, ஐ. ஹுசைன் றிஸ்வி, ஏ.எல். ஹாறூன், ஜனாபா. பர்சானா றியாஸ் ஆகியோரும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழா நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக, சது அமீரலிபுர வித்தியாலய மாணவர்களின் பொல்லடிக் குழுவினுடைய கிராமிய கோலாட்டம் இடம்பெற்றது. மேலும் மாணிக்கமடு கலை மன்றத்தின் தமிழ் பாரம்பரிய நடனமும், எச். நதீகா குமாரி அவர்களின் பயிற்றுவிப்பில் சிங்கள நடனக் குழுவினர், தங்கள் பாரம்பரிய கலாச்சார கண்டி நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். நௌபீஸா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் (கிழக்கு மாகாணம்) வசந்தா ரன்ஞனி, முஸ்லிம் சமய கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். இப்றாலெப்பை ஆகியோரின் நெறியாழ்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஸியா அர்ஷாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலைதாரிகளின் நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. இந்திரசிறி யசரட்ன, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஷான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், இறக்காமம் கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் எஸ்.எல். நிஸார் (பிரதி கல்வி பணிப்பாளர்), பொருளாளர் யூ.எல். ஜிப்ரி (ஆசிரியர்), சது-அமீர் அலிபுர வித்தியாலய அதிபர் எஸ்.எம்.லாஹிர், சது-ரோயல் கனிஷ்ட கல்லூரி அதிபர் எம்.ஏ. பஜீர் ஆகியோர் உட்பட கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணாமாக 2021 ஆம் ஆண்டுக்கான இறக்காமம் பிரதேச இலக்கிய விழாவானது பிற்போடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.