பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்கான வழக்கு ஒத்தி வைப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (02) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2021 பெப்ரவரி, 03ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்காக பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிசாரால், நீதிமன்றத் தடையுத்தறவை மீறி கலந்து கொண்டமைக்காக 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது இரண்டாவது தவணையாக இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி முனாஸ் மற்றும் சட்டத்தரணி நவம் கமலதாஸ் ஆகியோர் தமது பக்க சமர்ப்பனங்களை செய்திருந்தனர்.

பொலிசாரினால் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டதற்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் இரா.சயனொளிபவன் உள்ளிட்ட சிலர் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை 2022 யூன் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.