வவுனியாவில் விவசாயிகள் எரிபொருள் இன்மை பாதிப்பு!

வவுனியாவில் விவசாயிகள் எரிபொருள் இன்மையினால் பாதிப்பு!

பெரும்போக நெற்செய்கையானது வவுனியா மாவட்டத்தில் 22000 ஹக்டயரில் மேற்கொள்ளப்பட்டதுடன் அறுவடையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடையினை மேற்கொள்வதில் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக எரிபொருளுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு காரணமாக அறுவடை இயந்திரந்திரங்களிற்கான எரிபொருட்களை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு பெறுவதாக இருந்தாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறு கிடைக்கும் எரிபொருட்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கும் நிலையே தற்போது காணப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் தாங்கள் விதைத்த நெல்லினை அறுவடை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கள்ளாகியுள்ளனர்.

மேலும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பத்தில் இருந்து உரம், கிருமிநாசினிகளிற்கான தடை போன்ற காரணங்களினால் ஏற்கனவே விளைச்சல் குறைந்த நிலையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிறிது நெல்லை கூட பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சநிலை தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 6000 ஹெக்டயரில் சிறுபோக நெற்செய்கை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்வது கேள்விக்குறியாகவே உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.