(த.சுபேசன்)
இந்துக்கள் அனுஸ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன் என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
அறிந்தோ-அறியாமலோ செய்த பாவங்களுக்கான விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்தி விரதத்தை இந்து மக்கள் அனுஸ்டித்து வருகின்றனர்.
பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் “பாசுபதம்” என்ற அஸ்திரத்தை பெற்றதும்,
மார்க்கண்டேயர் எம தர்மரின் பாசக் கயிற்றில் இருந்து தப்பித்து நீண்ட ஆயுள் பெற்றதும் இந்த சிவராத்திரி நன்னாளில்.
சிவராத்திரி நாளின் தத்துவத்தை உணர்ந்து விரதத்தை அனுஸ்டித்தால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.
“நமசிவாய ” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது.இந்த புனித நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப் பயனை அடைய வேண்டும்.
இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி,மத,இன,நிற வேறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ – இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.
மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள்.அவர்களையே இந்த உலகம் போற்றும்.
நாம் அன்று அனுபவித்த இன்னல்களை இன்று உலகின் இன்னொரு நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.
யுத்த வலியை நேரில் கண்டவர்கள் நாம்.அதனை அனுபவித்தவர்கள் நாங்கள்.
சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈசன் அருள் புரிய வேண்டும். என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.