மட்டக்களப்பு- மாவடிவேம்பு பிரதேசத்தில் முன்பள்ளிக்கூட திறப்பு விழா

(செங்கலடி நிருபர்)

மட்டக்களப்பு- மாவடிவேம்பு பிரதேசத்தில் லக்ஷ்மி கல்வி மையம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட முன்பள்ளிக்கூட திறப்பு விழா 24.02.2022 நடைபெற்றது.

சிகண்டி பவுண்டேசன் அறநெறிப் பாடசாலைக்கு இதன்போது சுமார் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பெறுமதியான இசைக்கருவிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் நினைவாக கல்விக்கூட வளாகத்தில் அதிதிகள் பயன்தரு மரங்களை நட்டனர்.

கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இப்பாடசாலை காலை மற்றும் மாலை என தினமும் இரு வேளை இயங்கவுள்ளது.

ஐக்கிய இராஜ்யத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கிவரும் லக்ஷ்மி கரங்கள் அமைப்பின் தலைவர் சக்தி ராமலிங்கம், இலங்கைக்கான பிரதிநிதி எஸ். குலநாயகம் ,முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ரீ. ஜீவா, விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே. சிவலிங்கராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. குகராசா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

லக்ஷ்மி கரங்கள் அமைப்பு முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கல்விக்கூடங்களை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சுமார் முப்பது வருடகாலமாக தமிழ்ச்சமூகம் இழந்துள்ள கல்விச்செல்வத்தினை மீளப்பெறுவதற்கான முயற்சியாகவே கிராம மட்டத்தில் கல்விக்கூடங்களை அமைப்பதற்கு முன்னுரிமை யளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.