தலவாக்கலை உயிரிழப்பு தொடர்பாக 24 மணித்தியாலயத்தில் உரிய நடவடிக்கை

(தலவாக்கலை பி.கேதீஸ்)

தலவாக்கலை பகுதியில் முறையற்ற விதத்தில் 200 வருடம் பழைமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்டகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபை மண்டபத்தில் அவசர கூட்டமொன்று (23) ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல், நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் , தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் லெ.பாரதிதாசன், தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் விதுர சம்பத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பாக ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில்;

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறா வண்ணமும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விரிவான அறிக்கையொன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறும் ஆசிரியரின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் தகுந்த தண்டனையினை பெற்றுக்கொடுக்க துரித கதியில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணித்துள்ளார். உயிரிழந்த ஆசிரியர் வேலுசாமி மகேஸ்வரன் இப்பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற ஆசிரியர்.ஆசிரியரின் அகால மரணம் எம்மை துயரத்துக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுபோன்ற அபாயகரமான சம்பவங்கள் மலையகத்தில் இனி ஒரு போதும் நிகழாத வண்ணம் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாகவும் உறுதியளித்துள்ளார். அவரின் இழப்பு முழு சமூகத்திற்குமான இழப்பாகும். வீதியில் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மரம் ஒன்றினை வெட்டியது பாரிய குற்றமாகும். இதனுடன் சம்பந்தபட்ட சந்தேக நபர்களை 24 மணித்தியாலத்துக்குள் கைது செய்ய நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.

அதனை தொடர்ந்து தலவாக்கலை லோகி தோட்ட இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வேலுசாமி மகேஸ்வரனின் பூதவுடலுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதே வேளை இறந்த ஆசிரியரின் குடும்பதாருக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு லோகி தோட்ட மக்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.பின்னர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று அதனை பார்வையிட்டார். 200 வருடம் பழைமை வாய்ந்த இந்த ஆலமரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இதெல்லாம் எமது அடையாளங்கள் இதனை அழிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது? போன்ற கேள்விகளை உயர் அதிகாரிகளிடம் தொடுத்து ஆதங்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை லிந்துலை பொலிஸார் (22) கைது செய்தனர்.தலவாக்கலை லோகி மல்லியப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆலமரத்தினை வெட்டிய நானுஓயா பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் மரம் வெட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்ற நுவரெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் (22) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.