மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு

(குகதர்சன்)

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

எதிர்காலத்தில் சேதனப் பயிர் உற்பத்தியை மேற்கொண்டு அதன் தரத்தை பரிசோதனை செய்வதற்கு இரசாய ஆய்வு கூடங்களை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதன் மூலம் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும். இந் நடவடிக்கைக்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி மூன்று மாவட்டங்களுக்கும் வழங்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ் நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜே.முத்துபன்டா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கிழக்கு மாகாண விவசாய திணைக்கள ஆணையாளர் டாக்டர் எஸ்.எம்.ஹூசைன். கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் மற்றும் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இரசாயான பசளை பாவனையின்றி சேதனப் பசளையினை பயன்படுத்தி விவசாயம் மற்றும் சிறுதோட்டப் பயிர் செய்கை மூலம் சாதனை படைத்த விவசாயிகள் பணப் பரிசும் நினைவு சின்னமும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விவசாயிகளால் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச பாடசாலை மாணவர்களால் சேதனப்பசளையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்பணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.