அபாயத்தை எதிர்நோக்கும் யானைகள்

(எப்.முபாரக்)

இலங்கையின் கலாச்சார, அடையாள இனமாக விளங்கும் இலங்கையின் யானைகள் அழிவடைந்த விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்ற அபாயத்தினை எதிர்நோக்கி வருகின்றன. இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் உட்பட்ட மக்களும் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவது அவசியம்.

இலங்கையில் 7379 யானைகள் உள்ளதாகவும் 5879 யானைகள் தேசிய வனங்களிலும், சரனாலயங்களிலும், 1500 வரையான யானைகள் காட்டில் காணப்படுவதாக 2011 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்டது.

இலங்கையின் யானைகள், IUCN (இயற்கையை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம்) இனால் 1986ம் ஆண்டில் இருந்து அழிந்துபோகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையில் யானைகள் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 1989ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் யானைத்தந்த வியாபாரம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் யானைகளை கொல்வது மரண தண்டனையைகூட பெற்றுக் கொடுக்கும். வனவிலங்கு சட்டத்தின் பிரிவுகள் 30, 31, 314, 3113, 12 என்பன மிருகங்கள் வேட்டையாடப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் வருடம்தோறும் 200க்கும் அதிகமான யானைகள் கொல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் குட்டி யானை ஒன்றினை ஜீப் வண்டியின் முகப்பு விளக்கினை பயன்படுத்தி துன்புறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு 200000.00 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் முல்லைத்தீவு – ஒதியமலை கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில் 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 500000.00 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் பன்குளம் பகுதியில் யானைக்கு நடந்தது என்ன?
திருகோணமலை – பன்குளம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக யானை படும் அவலங்களையும் சமூக ஆர்வலர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினுடைய பொறுப்பு தொடர்பிலும் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

1. யானைக்கு என்ன நேர்ந்தது?
2. யானையின் இந்த நிலைமைக்கு காரணமாணவர்கள் யார்?
3. ஏன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை?
4. பாதிக்கப்பட்ட யானைக்கான சிகிச்சை தொடர்பில் ஏன் தீவிரம் காட்டப்படவில்லை?
5. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்புதான் என்ன?
6. மக்களுக்கு இருக்கின்ற அக்கறைகூட அதிகாரிகளுக்கு இல்லாதுபோன காரணம் என்ன?
7. யானையின் மரணத்துக்கான திகதி குறிக்கப்பட்டுவிட்டதா?
8. யானை இறந்த பின்னர் இறப்புக்கான பொறுப்பினை யார் பொறுப்பேற்பது?
9. யானையின் இறப்புக்கானவர்கள் கைது செய்யப்படுவார்களா?
10. பொதுமக்களிடமிருந்து வன விலங்குகளையும், வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களையும் பாதுகாக்கும் என்ன பொறிமுறையினை அரசாங்கம் கையாள்கின்றது?