நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வு

(குகதர்சன்)

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வு ஒரு நாளில் உன்னை மகிழ்விப்போம் எனும் தொனிப்பொருளில் 2022 இவ்வருடத்திற்கான மாவட்ட ரீதியான சிறுவர்களை மையப்படுத்திய முதலாவது நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ.குகதாசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்; வழிகாட்டலில் 2022 இவ்வருடத்திற்கான மாவட்ட ரீதியான சிறுவர்களை மையப்படுத்திய நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட 14 பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதான களவிஐயம் மேற்கொண்டு அங்கு பிள்ளைகளுக்கு எதிராக ஏற்படக்கூடிய சகலவிதமான துன்புறுத்தல்களையும் குறைக்கும் அல்லது தடுக்கும் வகையிலாக சமூக மட்டத்திலே கட்டமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கிராமிய மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் சிறுவர் கழகங்களை மீளமைப்புச் செய்வதும், சிறுவர்களுக்கான படைப்பாக்க திறன் மற்றும் வாழ்க்கைத் தேர்ச்சி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல், பிள்ளைகளை பராமரிப்பது, அவர்களின் பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்தல், வீட்டை அடிப்படையாக கொண்ட பராமரிப்பின் முக்கியத்துவம், திணைக்களத்தினுடைய மாற்றுப் பராமரிப்பு தேசிய கொள்கை திட்டம், சிறுவர் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது. இவ்வருடம் இது போன்று மாவட்டத்திலே அனைத்து சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலகமாக சென்று அங்கு காணப்படும் பின்தங்கிய கிராமங்களுக்கு நிகழ்வை நடாத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் எனப் பலர் பங்குபற்றியிருந்தனர்.