தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் 5 மணி விசாரணை

( வாஸ் கூஞ்ஞ)

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கொழும்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் ஐந்து மணி நேரம் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இவ் இயக்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் இவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மன்னாரில் இயங்கி வரும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தலைவர் வீ.எஸ்.சிவகரனை 18.02.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரனைப் பிரிவின் பிரிவு 01 இன் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு திங்கள் கிழமை (14.02.2022) இவருக்கு அழைப்பானை விடுக்கப்படடிருந்தது.

இதற்கமைய தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இந்நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்னிலையாகி இருந்தார்.

அப்பொழுது தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த பத்து ஆண்டுகளில் நடாத்திய போராட்டங்கள் கூட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு விதமான கேள்விகளை தன்னிடம் முன்வைத்ததhகவும் அதில் பல கேள்விகள் வெறும் கற்பனைக் கதையாக இருந்ததாகவும் வி எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

தான் இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணையை எதிர் கொள்வதாகவும் எமது சனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த முனைவது நீதியான சனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம் கவலையடைகிறோம் என கூறியதுடன்

இவ்விதமாக பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணைக்கும் உட்படுத்து என்பது சமூகத்தின் அடிப்படை நீதிபூர்வமான கருத்துரிமையும் செயல்பாட்டையும் கேள்விக்குட்படுத்தி அடிப்படை வாழ்வுரிமையை வலிந்து நசுக்குவதாகவே எமக்கு புலப்படுகிறது என்பதுடன் அரசு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.