பாடையேறினான் – கனவுகளுடன்

-படுவான் பாலகன் –
காகங்கள் கரைவதனை நிறுத்தி இரண்டு மூன்று மணித்தியாலயங்கள் ஆகிவிட்டன. சிறுவர்களின் விளையாட்டு ஓசையும் அடங்கிவிட்டது. மௌனமாய் தெரு காணப்படுகின்றது. தொலைபேசியை பார்ப்பதும் வைப்பதுமாக சின்னப்பிள்ளை இருந்துகொண்டிருக்கின்றாள். வழமையாக அழைப்புவரும் நேரத்திற்கு அழைப்பில்லாமையினால் அந்திரத்தில் நடப்பதுபோன்று அங்கும், இங்குமாக நடந்துகொண்டிருக்கின்றாள். நேரத்தினையும் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கின்றாள்.
படித்துக்கொண்டிருந்த சின்னப்பிள்ளையின் மகள்,
‘என்னம்மா ஓரிடத்தில் நிற்காம நடக்கின்றீர்கள்’
என்று கேட்க, கோபத்துடன்
‘உனக்கு கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டுமா?’
என்று அதட்ட, மகளுக்கும் அம்மா கோபத்தோடு இருப்பது விளங்கிவிட்டது. இன்னமும் பேசினால் ஏச்சு பலமாக விழும் என்பதினால் பேசாமலே இருந்தாள்.
தன் மகளுக்கு ஏசிவிட்டேன் என்ற கவலை சின்னப்பிள்ளைக்கு இருந்தாலும், அவள் கணவன் அழைப்பு எடுக்கவில்லையே என்ற கவலைதான் அவள்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் கடந்து செல்ல செல்ல அவளின் மனதில் பயமும், பதட்டமும் கூடிக்கொண்டே போனது. வழமையாக 9மணிக்கு உணவு உண்ணும் சின்னப்பிள்ளையும், அவள் மகளும் இன்று 10மணியை கடந்தும் உணவு உண்ணவில்லை.
‘அம்மா பசிக்குது’
என மகள் சத்தமிடுகின்றாள்.
‘பசித்தாள் போட்டு சாப்பிடன்’ என்கிறாள் சின்னப்பிள்ளை.
தரம் 9ல் கற்கும் சின்னப்பிள்ளையின் மகளுக்கு, அவளது தாயே பாத்திரத்தில் உணவும், நீரும் எடுத்துக்கொண்டு அருகில் கொடுக்க வேண்டும். இருவரும் இணைந்து இரவில் உட்கொள்வர். தாய் இல்லையென்றால் உணவு உண்ணவேமாட்டாள். அவளாக உணவு பாத்திரத்தில் எடுத்து உண்டதில்லை.
தாய் இவ்வாறு பேசியதும் உடனே ஏங்கி ஏங்கி அழத்தொடங்கினாள். வீட்டின் விறாந்தையில் இருந்து படித்துக்கொண்டிருந்தவள், வேகமாக எழுந்து, புத்தகத்தினை தனது வீட்டின் ஓரமாகவிருந்த பையினுள் வைத்துவிட்டு தலையணையை எடுத்துக்கொண்டு, மண்டபத்தின் ஓரமாக அழுதபடியே தூங்கினாள்.
எப்போதும் அம்மாவை இறுகி அணைத்துக்கொண்டு தூங்கும் இவள், என்றுமில்லாதவாறு தனியாகவே தூங்கினாள்.
சின்னப்பிள்ளையும் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். இவளும் பலமுறை தொடர்பை ஏற்படுத்தினாலும் தொலைபேசி வேலைசெய்யவே இல்லை. இவளின் வீட்டிற்கு ஒரே ஒரு  கதவே உள்ளது. அக்கதவும் தகரத்தினால் செய்யப்பட்டது. திறந்திருந்த அக்கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு தொலைபேசியை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
பிள்ளை உணவு உண்டாளா? என்ன செய்கின்றாள்? என்ற சிந்தனைகள் அவள் மனதில் எள்ளவும் ஓடவில்லை.
சிறிதாக கூட திட்டினாள் ஏங்கி அழுவாள் என்பதினால், ஒருநாள் கூட திட்டாமலே, மகளை செல்லமாக வளர்த்துவிட்டாள். அவளதும் தந்தையும் எதைக்கேட்டாலும் வாங்கியே கொடுப்பார். ஒருநாள் கூட மறுப்புதெரிவித்ததில்லை. கஸ்டங்கள் தெரியாமலே பிள்ளையும் வளர்ந்துவிட்டாள். தந்தைகூடவே இருக்காததினால் தாயே தந்தையாக இருந்துவிட்டாள்.

திருமணமாகி 20வருடங்கள் ஆகிவிட்டன. நான்கு தடவைகள் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பி வந்திருக்கின்றான் சின்னப்பிள்ளையின் கணவன். 5வது தடவையாக 2020இல் வெளிநாட்டிற்கு மீண்டும் சென்றவன்.
திருமணத்திற்கு முன் வரம்பு வேலை, வேளாண்மை வெட்டுதல், நெல்லுக்கட்டுதல் என பல வேலைகளை செய்தவன். நெல் அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டதினால் வெளிநாட்டிற்கு சென்றுதான் வருமானத்தினை ஈட்டி வருகின்றான். திருமணமாகி 20வருடங்களில் மொத்தமாக ஒரு வருடங்கள் மாத்திரம்தான் நாட்டில் இருந்திருக்கின்றான்.
வெளிநாடு செல்வதற்கும் தங்கள் கையில் பணம் இல்லாததினால், 10வீத வட்டிக்கு கடன்வாங்கிதான் வெளிநாடு சென்றவன். வாங்கிய கடனையும், கடனுக்கான வட்டியை அடைப்பதற்கும் நீண்ட காலங்கள் எடுத்துவிட்டன. சம்பளமும் மிகக்குறைவு. வெளியில் சென்று வேறுவேலைகள் செய்து வருமானமும் ஈட்டமுடியாது. இதனால் குடும்பத்தில் பெரிதான வளர்ச்சி இல்லையாயினும், அன்றைக்கு அன்றை கடன்வாங்காது உணவு உண்டு சிறிது சேமிக்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.
நிலையில் சாய்ந்த சின்னப்பிள்ளையின் மனதில் நேற்று, நேற்றுமுந்தினம் நடந்த சம்பவங்கள் படமாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
வீட்டின் பின்பக்கமாய் நிற்கின்ற புளியமரத்தில் நின்று பக்குள் கத்தியதையும், திணுக்கிட்டு அவள் கத்தியதும், வீட்டில் கெட்ட விடயங்கள் நடைபெறுவதாக கண்ட கனவுகளும் இவளை உறுத்திக்கொண்டே இருந்தன. காகங்கள் வட்டமாக கரைந்ததையும் நினைக்கும் போது, இவளை அறியாத பய உணர்வு கண்களில் இருந்து கண்ணீரை வரவைத்தது.

தனது தாய், தந்தை இறந்தபோது கூட அவர்களின் இறுதிக்கிரியைகளில் அவனால் கலந்துகொள்ள முடியவில்லை. வேலை செய்யும் கம்பனியில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு நீண்ட நாட்கள் எடுத்தமையினால் இறுதிக்கிரியைக்கூட அவனால் செய்ய முடியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை தொடர்பில் வெறுப்பும் வேதனையும் இருந்தாலும் அவற்றை கூறி தனது மனைவியுடன் சஞ்சலித்துக் கொள்வான்.
பிள்ளையின் எதிர்காலத்திற்காக உழைக்கத்தானே வேண்டும்’.
‘இனி நாட்டிற்கு வந்தால் திரும்ப வெளிநாடு போறதில்லை’
என பல தடவை சின்னப்பிள்ளையுடன் பேசிக்கொண்டுள்ளான்.
பிள்ளையும் வளர்ந்துவிட்டாள் நம்மட ஊரிலே ஏதாவது தொழிலை செய்திட்டு இருப்பதுதான் நல்லது’
என சின்னப்பிள்ளையும் பலமுறை அவனிடம் கூறியிருக்கின்றாள்.
பொறுத்ததோடு பொறு இன்னும் ஒரு வருடத்தில் எல்லாவற்றையும் நிறுத்திட்டு வந்திடுவன்’ என்று மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் கூறியதையும் சின்னப்பிள்ளை நினைத்துக்கொண்டிருக்கின்றாள்.
20வருடங்கள் ஓடித்தானே போய்விட்டது’.
‘இன்னமும் ஒருவருசம் தானே’
‘பார்த்திருக்க ஒரு வருடம் முடிந்திடும்’ என்று கூறி மனச்சந்தோசம் கொண்டதையும் எண்ணிக் கொண்டிருந்தாள்.
சின்னப்பிள்ளையின் உறவுக்காரர் ஒருவரும் இவளின் கணவனுடன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். அவர் நேற்று நீண்ட காலத்திற்கு பிறகு தொலைபேசி எடுத்து பேசியிருந்தார். பிள்ளையையும், வீட்டு நிலைமைகளையும் விசாரித்து இருந்தார்.
அவரின் பேச்சில் பதட்டமும் தெரிந்தது. எதையோ? என்னிடத்தில் மறைத்தது போல் தென்பட்டது. தீடிரென ஏன் தொலைபேசி எடுத்தார்? எவ்வாறு என்னுடைய தொலைபேசி இலக்கம் கிடைத்தது என்று கேட்ட போதும் சமாளித்தே பேசினார். இவரையும் பார்க்க சென்றதாகவும், இருவரும் பேசியதாகவும் கூறினார். நிறையவே இவரைப்பற்றி புகழ்ந்தார், பரிதாபப்பட்டார். என்பதை நினைத்து கொண்ட இவளுக்குள் பல சந்தேகங்கள் தோன்றின
வீட்டிற்கு தான்வந்துதான் பிள்ளைக்கு வீடு கட்டுவதென்றும், கல்வியில் உயர்ந்தவளாக கொண்டுவர வேண்டும். தனது மனதில் இருந்த விருப்பங்களை தனது கணவன் அண்மையில் பேசியதையும் நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே இருக்கின்றாள். அதனை நினைத்து கற்பனையிலேயே ஆழ்ந்தாள்.
கைகள் கதவில் பட மீண்டும் நிமிர்ந்து பார்க்கின்றாள் நள்ளிரவைக்கடந்து விட்டது.
‘பொழுதுவிடிந்ததும் இவருக்கு அருகில் வேலைசெய்கின்ற கண்ணனிடம்தான் கேட்க வேண்டும்’.
அவனின் தொலைபேசி இலக்கமும் தெரியாது’.
‘காலையில் போய்தான் அவங்கட வீட்ட போய், இலக்கத்தை பெற்று பேசி பார்க்க வேண்டும்’,
என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு உட்காந்திருக்க விடிந்துவிட்டது.
கண்கள் இரண்டையும் சீலையால் கசக்கிக்கொண்டு வேகமாக செல்கின்றாள்.
பக்கத்தில் உள்ளவர்கள்,
சின்னப்பிள்ளை ஏன் வேகமாக காலையில் நேரத்தோடு வேகமாக நடந்து போகின்றாள்’ என பேசிக்கொள்கின்றனர்.
500மீற்றருக்கு அப்பால்தான் கண்ணனின் வீடும் உள்ளது. அவள் சென்றுகொண்டிருக்கும் போது,
வெளிநாட்டில் வேலையும் செய்யும் போது ஒருவர் விழுந்து செத்ததாம்’
என்று பேசிக்கொள்கின்றனர். அதையும் பொருட்படுத்தாமல் பதற்றத்துடன் செல்கின்றாள்.
கண்ணின் வீட்டின் வாசலில் நின்று சத்தமிடுகின்றாள். கண்ணனின் தாய் வெளியில் வருகின்றாள். சின்னப்பிள்ளையின் வருகை கண்ணனின் தாய்க்கு விளங்கிவிட்டது. இரவே கண்ணன், சின்னப்பிள்ளையின் கணவன் இறந்த செய்தியை சொல்லிவிட்டான். காலையில் சென்று கூறுவோம். என்றுதான் கண்ணனின் தாயும் இருந்துவிட்டாள்.
சின்னப்பிள்ளை வீடுதேடி வந்ததும் என்ன செய்வதென்று தெரியாது? தடுமாறுகிறாள்.
‘என்ன வந்த சின்னப்பிள்ளை என்று பேச்சு தடுமாறாவே வினவினாள்’.
‘இவர் இரண்டு நாளாக பேசவில்லை’.
‘என்னமோ தெரியா’?
‘கனவும் வித்தியாசமா கண்டன்’.
மனமும் சங்கடமாக இருக்கு’.
‘அதான் கண்ணனைப் போய் பார்க்க சொல்லுவம் என்று வந்தன்’ என்று கூற,
கண்ணனின் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் சொரிய விம்மி விம்மி அழுதுகொண்டே உன்கணவன் பாடையேறினான் என்று கூற, சின்னப்பிள்ளையும் ஓவென்று கீரிட்டு எல்லோரும் ஒன்றுசேரும்படி கதறினாள்.