வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம்!

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதனால் இரு பகுதியினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை”, “கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும்”, “செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.