மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

(சுமன்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் (முருகன்) ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக மகாயாக பெரும் சாந்தி விழா எதிர்வரும் 06.02.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கைத் திருநாட்டிலே சைவமும், தமிழும், ஆகம வழிபாடுகளும் ஓங்கி விளங்குகின்ற மட்டக்களப்பு மாநகரிலே ஜெயந்திபுரம் எனும் பதியிலே கோவில் கொண்டுள்ள ஸ்ரீ குமாரத்தன் (முருகன்) பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் சர்வ மங்கலகரமான பிலவ வருடம் தைத்திங்கள் 24ம் நாள் 06.02.2022 ஞர்யிற்றுக்கிழமை பூர்வபக்ஷ சஷ்டித் திதியும், ரேவதி நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய காலை 08.47 மணி முதல் 10.26 மணி வரையுள்ள மீன லக்கிண சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆலய பிரதம குரு சைவ நண்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெயப்பிரதாபன் சர்மா தலைமையில் பிரதிஷ்டா பிரதமகுரு ஆகம கிரியா பாவணர் சிவாச்சார்ய திலகம் வேத தமிழ் மறைச் சுடர் சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள் அவர்களால் இக் கும்பாபிஷேகப் பெருவிழா நிகழ்த்தப்படவுள்ளது.

02.02.2022ம் திகதி கும்பாபிஷேச கிரியைகள் ஆரம்பமாகி 04.02.2022 மற்றும் 05.02.2022ம் திகதிகளில் எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெற்று 06.02.2022ம் திகதி மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ குமாரத்தன் பெருமானுக்கு இடம்பெவுள்ள இக்கும்பாபிஷேசப் பெரும் சாந்தி விழாவில் கலந்து கொண்டு பெருமானுக்கு எண்ணெய்க்காப்புச் சாத்தி கும்பாபிஷேகத் திருவிழாவைக் கண்டு அருள்பெற அனைத்து பக்த அடியார்களையும் ஆலய பரிபாலன சபையினர் அழைத்து நிற்கின்றனர்.