கல்குடா – கும்புறுமூலை கடலில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களில் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் தை பொங்கல் தினாமான 14 ஆம் திகதி நீராடிக் கொண்டிருந்த போதே இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதில், கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16), ச.அக்சயன் (வயது 16) ஆகிய இரு சிறுவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர்.

கடலில் நீராடிய மற்றுமொரு சிறுவன் காப்பாற்றப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலில் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் இடம்பெற்று வருவதுடன், காணாமல் போன ச.அக்சயன் எனும் சிறுவனின் சடலம் 24 மணித்தியாலயங்களின் பின்னர் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.

காணாமல் போன மற்றைய சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.