திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16வது நினைவஞ்சலி அனுஷ்டிப்பு

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் 16வது நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது

நேற்று (02) திருகோணமலை கடற்கரைக்கு முன்னாள் காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்ட  மாணவர்களின்  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக  7 மாணவர்கள்  சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் இரண்டு மாணவர்கள் உயிர்தப்பியிருந்தனர்

அன்றைய நாள் திருகோணமலை மண்ணில் கறுப்பு தினமாக  அனுஷ்டிக்கபட்டிருந்தது இவ்வாறு உயிரிழந்த 5 மாணவர்களும் 2005ஆம் ஆண்டு உயர்தரத்தில் பரிட்சை எழுதி பெறுபேறுக்காக காத்திருந்த வேளையில் திருகோணமலை நகரை அண்டிய கடற்கரைக்கு முன்னால் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு மனிதாபிமானமற்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களினால் வழக்கு தொடரப்பட்டு சந்தேகத்தின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படையின் படை வீரர்கள் கைது செய்யப்பட்டு போதிய சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப் பட்டிருந்தனர்

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன் என்பவறினால்  ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்ட போதிலும் 16 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான சரியான நீதி கிடைக்கவில்லை எனவும்,

கடந்த காலங்களில் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு இந்த அரசு மிகுந்த பிரேயத்தனம் மேற்கொண்டிருந்தது அந்த உயிருக்கு நியாயம் வேண்டும் என போராடியது

அநியாயமாக இலங்கை தேசத்தில் பிறந்து வளர்ந்த இந்த ஐந்து பல்கலைக் கழக மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்று பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாக இருந்த எதிர்கால புத்திஜீவிகளை,அரசாங்கத்தில் பெரும் பதவிகளில் இருக்கவேண்டிய தமிழ் சமூகத்தை மிகவும் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டு குற்றவாளிகள் இனம் காணப்பட்ட போதிலும் இதுவரை இதற்கான நீதி கிடைக்கவில்லை என்பதே எமது மிகப்பெரிய வேதனையாக இருப்பதாக நினைவஞ்சலியில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட உணர்வாளர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 16வது நினைவஞ்சலியின் போது ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு விளக்கேற்றி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் திருகோணமலையின் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.