சி.துரைநாயகம்
(எப்.முபாரக் )
அண்மைக்காலமாக சிறுவர்கள் கடத்தப்பட்டுவது மட்டுமல்லாமல் அவர்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துவருதாகவும் இதனால் இலங்கையில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(31) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அண்மைக்காலமாக சிறுவர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன குறிப்பாக பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக சிறுவர்கள் பாலியல் தேவைகளுக்காக கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. இதுபோன்ற செயற்பாடுகளின் காரணமாக சிறுவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இவற்றை தடுப்பதற்கும் சிறுவர்களை பாதுகாப்பதற்குமான பல கட்டமைப்புகள் காணப்படுகின்ற போதிலும் அவர்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக மூதூர் – புளியடிச்சோலை கிராமத்தில் 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் டிசம்பர் மாதம் 7ம் திகதி கடத்தப்பட்டிருக்கின்றார், மூதூர் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரினால் 8ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பொலிசாரின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏற்கனவே 13 வயதான சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான நிலையிலேயே இன்னுமொரு கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை வருத்தத்தைத் தருகின்றது.
அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாகவும் பல சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன இந்நிலையில் எமது நாட்டில் காணப்படுகின்ற சிறுவர்களை பாதுகாப்பதற்கான சட்டங்களும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் வலுவிழந்து காணப்படுகின்றமையே பிரதான காரணமாகும். எனவே அரசாங்கம் சட்டங்களையும், தண்டனைகளையும் வலுப்படுத்தி சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து தரப்பினரையும் வினைத்திறன் உடையதாக மாற்றவேண்டும் எனவும் புளியடிச்சோலை கிராமத்தில் கடத்தப்பட்ட மாணவியை விரைவில் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.