ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி இராணுவ ஆட்சியை அமைக்கும் செயலணியா ?

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

(இ.சுதாகரன்)

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற போர்வையில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணி இராணுவ ஆட்சிக்கு பரிந்துரை வழங்குவதற்கான செயலணியா என்ற சந்தேகம் எழுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டினை மீட்க வேண்டும் என்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இராணுவத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது ஒரு நிழல் இராணுவ ஆட்சி போன்ற நிலைமையே காணப்படுகிறது. ஆனால் ஜனாதிபதியால் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி ஆரம்பிக்கப்பட்டு அந்த செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் செயலணி வடக்கு கிழக்கிலும் சில இடங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை அறிந்து வந்தமையையும் காண முடிந்தது.
இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபடாது, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு சட்டத்தை இந்த நாட்டில் உருவாக்குவதே பொறுப்பு என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இலங்கையில் பல்வேறு வகையிலும் சர்ச்சைக்குள்ளான பௌத்த தேரராக விளங்கும் கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை, சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரர் ஆறு வருட சிறை தண்டனை பெற்று, பின்னர் பொதுமன்னிப்பு பெற்றவர்.
இந்தச் செயலணியில் ஆரம்பத்தில் தமிழர்கள் சேர்க்கப்படாததும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியதை தொடர்ந்து பின்னர் தமிழர்களும் இணைக்கப்பட்டனர் என்பது வேறுவிடயம்.
தற்போது இவர் நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு இராணுவத்தினரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என கூறுவதில் இருந்து தற்போதய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி உள்ளது என்பதை உணர்ந்துள்ளாரா அல்லது இந்த தேரரை கொண்டு அரச தரப்பில் உள்ள யாராவது அவரை இவ்வாறு கூறுமாறு ஆலோசனை கூறினார்களா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பணிகள் நிறைவடைந்த 4 மாதங்களுக்குப் பின், அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்க தாமும் தமது செயலணியும் தயாராகவுள்ளதாக கடந்த நவம்பர் 11,ம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்த நிலையில், இந்த செயலணி ஆரம்பித்து இரண்டு மாதம் நிறைவடையாத நிலையில் இராணுவத்தினரிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கூறுவதில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன.
பொதுவாகவே ஆட்சியாளர்களிடம் அதிருப்தி ஏற்படுமாயின் ஆட்சியை மாற்ற வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் அல்லது அரச தலைவர் பதவி விலக வேண்டும் என்றுதான் பலரும் கருத்து கூறுவார்கள்.
இந்த ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான பொறுப்பு வாய்ந்த தலைவரென ஜனாதிபதியால் இனம்கண்டு நியமிக்கப்பட்ட ஒரு பௌத்த மத தேரர் இவ்வாறு சில காலத்திற்கு இராணுவத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறிய கருத்தில் இருந்து ஒரு நாடு ஒரு சட்டம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதை அவர் தெளிவாக உணர்ந்துள்ளார் என்பதையே இவரின் கருத்து கோடிட்டுக்காட்டுகிறது.
ஆங்கிலேயர்கள், போர்த்துகேயர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இன்றும் இலங்கையில் அமுலில் உள்ளது. அதனை மாற்றி, இலங்கைக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை உருவாக்குவதே தற்போதைய கட்டாயம் என ஏற்கனவே ஊடகங்களில் கருத்து தெரிவித்த ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர்  தீடிரென இராணுவ ஆட்சிதான் சில காலங்களுக்கு இந்த நாட்டிற்கு நல்லது என கூறியுள்ளமை பல சந்தேகங்களை தொற்றுவித்துள்ளதாகவும் இந்த கருத்துக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் என்ன சொல்லப்போகிறார்கள் எனவும் மேலும் கூறினார்.