கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் பேராசிரியராகப் பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றும் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் 2021.01.15 முதல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் ஆனைகட்டியவெளி கிராமத்தில் இராமக்குட்டி சின்னத்தம்பி – கணபதிப்பிள்ளை வாலலெட்சுமி (சாரதா) ஆகியோருக்கு மகனாகப் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியை ஆனைகட்டியவெளி கலவன் பாடசாலை, மண்டூர் மகாவித்தியாலயம், சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றில் பயின்றார்.
பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராகத் தமிழ் விசேட கற்கை நெறியில் கல்வி கற்று விசேட இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணி (M.Phil), கலாநிதிப் (Ph.D) பட்டங்களையும் பெற்றார்.
இப்பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்ற அவர் தற்போது அத்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பட்ட மேற்படிப்புகள் பிரிவின் இணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
தனது கல்விப் பணியோடு இணைந்த வகையில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளதோடு  பல நூல்களைத் தொகுத்துமிருக்கின்றார். தேசிய, சர்வதேச ஆய்வு இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
அதேநேரம், சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் நடைபெற்ற ஆய்வு மகாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கின்றார். பல்கலைக்கழக மட்டத்திலே ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தியுமுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள ஆய்வு நூல்கள்: ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் (2020), தமிழில் அற இலக்கியங்கள் (2020), மட்டக்களப்பு வாய்மொழிப் பாடல்கள்: கட்டுப் பாடல்களின் ஆக்கமும் பயில்நிலையும் (2019), கிழக்கிலங்கை மரபுவழித் தமிழ் இலக்கியங்கள் (2019), இலக்கியமும் தமிழர் பண்பாட்டு மரபுகளும் (2020), மண்டூர் பிரதேச நாட்டார் பாடல்கள் – அறிமுகமும் ஆய்வும், (2020),
அத்தியாய ஆய்வு நூல்கள்: கலை இலக்கிய மெய்யியல் கொள்கைகள் (2020) என்ற நூலின் இரண்டாம் அத்தியாயம் – ஆபிரிக்க ஒறேச்சர் அறிமுகமும் அதன் அளிக்கை மரபுகளும்,    நாட்டார் வழக்காறுகள்: சடங்குகளும் சமூக மரபுகளும் (2020) என்ற நூலில் மூன்றாம் அத்தியாயம் – இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்: ஆதிக்கக் கருத்தியல்கள் – ஒடுக்குமுறைகள் – மாற்றுக் குரல்கள்.
தொகுப்பு நூல்கள் : இலங்கைத் தமிழ் நாட்டார் கதைகள் – வரலாற்றுநிலைப்பட்ட கதைகளின் தொகுதி (2020), உலகமயமாக்கல் சூழலில் தனித்துவப் பண்பாட்டுப் பேணுகை, வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு (2019), ஈழத்துக் கல்வியியல் அறிஞர்கள் (2019),  முதுகலைமாணி – மாணவர் கையேடு (2018), புகழ் பூத்த புலவர்மணி- கவிதைத் தொகுதி (2018),  ‘பாரதி’ – பாரதி சஞ்சிகைத் தொகுப்பு (2016),     உள்ளதும் நல்லதும் (இரண்டாம் பதிப்பு) (2015), கிழக்கிலங்கை வாய்மொழிப் பாடல் மரபு: ‘கட்டுப்பாடல்’ களின் தொகுப்பு (2017).
இந்த நூல்களிலே “மட்டக்களப்பு வாய்மொழிப் பாடல்கள்: கட்டுப் பாடல்களின் ஆக்கமும் பயில்நிலையும்” என்ற நூல் 2020-2021ஆம் ஆண்டுக்குரிய அரச இலக்கிய விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
“கிழக்கிலங்கை மரபுவழித் தமிழ் இலக்கியங்கள்” என்ற நூலுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலுக்குரிய விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் பல கலை, இலக்கிய, ஆய்வுச் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் இவரும் பேராசிரியர் வ.இன்பமோகனும் இணைந்து ‘மொழிதல்’ என்ற பெயரில் ஆய்வு இதழ் ஒன்றினை 2014ஆம் ஆண்டிலிருந்து நடாத்தி வருகின்றனர். மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் முதல் பணியாற்றிவருவதுடன், மண்டூர் கலை இலக்கிய அவை, மட்டக்களப்பு சுதந்திர ஆய்வு வட்டம் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.