மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது

( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான (2022) வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டபோது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடந்து இது தொடர்பாக மீண்டும் இக்கூட்டம் பிரிதொரு நாளில் கூட்டப்படும் என தவிசாளர் இவ் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டுக்கான (2022) வரவு செலவு அறிக்கை தொடர்பாக திங்கள் கிழமை (27.12.2021) இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் காலை 10.35 மணியளவில் நடைபெற்றது.

இவ் கூட்ட அமர்வில் சபையின் 21 அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். இவ் கூட்டம் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தனது ஆரம்ப உரையில்

நாம் கௌரவ உறுப்பினர்கள் என்றதொரு காரணத்தினால் நாம் இவ்கூட்டத்தை எவ்வித வாக்குவாதம் இல்லாது நாங்கள் சட்ட ரீதியாக இவ் கூட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

நாம் தற்பொழுது 2021 ஆம் ஆண்டு திட்டங்களை முடித்துக் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கும் ஒரு நிகழ்வாக இன்று இவ் அமர்வில் கலந்து கொள்ளுகின்றோம்.

ஆகவே சபை உறுப்பினர்களான நாம் அனைவரும் அமைதியான முறையில் இவ் வரவு செலவு திட்டத்தை வரவேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செயலாளரினால் வரவு செலவு அறிக்கை வாசிக்க முற்பட்டபோது இவ் வரவு செலவு அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பிரேரனையை கொண்டு வந்தபொழுது அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

இவ்வாறு இவ் வரவு செலவு திட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர் முன்மொழிய இதை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் வழிமொழிந்தார்.

இதைத் தொடர்ந்து சபையில் தவிசாளரால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அப்பொழுது தமிழரசுக் கட்சியை சார்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த தலா ஒருவரும் மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்துக்கு எதிராகவும்

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் தலா ஒருவரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக மொத்தம் 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இவ் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் இவ் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவ் வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்பிக்க பிற்தொரு நாளில் இவ் சபை கூடும் என தவிசாளர் தெரிவித்து இவ் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.