அரச ஊழியர்களுக்கான விசேட முற்பணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரசாங்க ஊழியர்களுக்கான புதுவருட விசேட முற்பண தொகையை, தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு என்பவற்றின் செயலாளர்களுக்கு மேற்படி சங்கம் அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரச ஊழியர்களுக்கு புது வருட விசேட முற்பணம் வழங்கப்படுவதன் பிரதான
நோக்கம் புது வருடத்தில் அரச ஊழியர்களது பிள்ளைகளுக்குரிய பாடசாலை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காகும்.

ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ள 4000 ரூபாவைக் கொண்டு தற்போதைய பொருளாதார
நெருக்கடி காரணமாக எதனையும் செய்து கொள்ள முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.. இந்நிலையில் இத்தொகையைக் கொண்டு ஒரு பிள்ளையின் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்கள் உள்ளனர் .

எனவே இத்தொகையை 10000 ரூபாய் வரை அதிகரிப்பதன் மூலமே தமது பிள்ளைகளின் தேவைகளை அரச சேவை ஊழியர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.