13 தங்கம் வென்ற தர்ஷிக்காவை கௌரவித்த தென்கிழக்குப் பல்கலை சமூகம்

பாறுக் ஷிஹான்

13 தங்கப் பதக்கங்களை பெற்று கொழும்புப் பல்கலைக்கழக   பட்டமளிப்பு விழாவில் சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவ மாணவி தணிகாசலம் தர்ஷிகாவினை கௌரவிக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(27)  பிற்பகல்   இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின்பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த சாதனை மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிருவாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவமளித்தது. இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னத்தினை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கருத்துதெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் எதிர்காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமையப்பெற வேண்டியதன் அவசியத்தினைச் சுட்டிக்காட்டியதுடன் இவரைப் போன்ற சாதனையாளர்களின் ஒத்துழைப்பு அதற்கு அவசியமானது எனவும் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்திலுள்ள உயர் கல்வி நிறுவனங்களுள் ஒன்று என்றவகையில் தர்ஷிக்கா போன்ற சாதனையாளர்களை கௌரவிப்பதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மகிழச்சி அடைவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

சாதனை மாணவி தர்ஷிக்கா அவரைக் கௌரவித்த பல்கலைக்கழக உபவேந்தருக்கு நன்றி கூறியதுடன் தனது சாதனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமது குடும்பம், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள், விடா முயற்சி என்பன தனது சாதனைக்கு வித்திட்டதனையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வானது பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் இடம்றெ;றதுடன் இந்நிகழ்வில் பதிவாளர் உட்பட பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.