அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளினால் நாட்டினுடைய பொருளாதாரம் சீரழிந்துள்ளது- மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலி

(ஏ.எல்.றியாஸ்)இரசாயன உரத்தினை தடை செய்து சேதனப் பசளை வேலைத்திட்டத்தினை இந்த அரசாங்கம் திடிரென நடைமுறைப்படுத்தியதனால் நாட்டினுடைய ஒட்டுமொத்த விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரித்தார்.
பொத்துவில் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று அண்மையில் பொத்துவிலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நெல் உற்பத்தி செய்து நாடு முழுவதும் நெல் வழங்குகின்ற மாவட்டங்களில் அம்பாரை மாவட்டம் மிகப்பிரதானமானது. தற்போது இந்த அரசாங்கம் இரசாயன உரத்தினை தடை செய்து திடிரென சேதனப் பசளைகளை பயன்படுத்துமாறு உத்தரவிட்டதனால் சேதனப் பசளைகளையும், இரசாயனப் பசளைகளையும் பெற்றுக்கொள்ள முடியாததொரு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் பிழையான பொருளாதாரக் கொள்கையினால் இன்று விவசாயிகள் உரம் இல்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த நாட்டினுடைய விவசாயத்துறை பாதிப்படைந்துள்ளது. விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் கூட விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்க இந்த அரசாங்கத்திடம் பணம் இல்லை. தற்போது நாடு பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டால் பாரிய உணவுத்தட்டுப்பாடு நிலவும் ஆபத்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு கிலோ அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கும் என ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி 500 ரூபாவுக்கும் அரிசி வாங்க முடியாததொரு நிலையை நாட்டு மக்கள் எதிர்கொள்ளப் போகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இளைஞர்களுக்கு தொழிலில்லை, தொழில் உள்ளவர்களுக்கு வருமானம் போதாது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். அரசாங்கத்தின் பிழையான பொருளாதாரக் கொள்கையினால் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் சீரழிந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.