சாய்ந்தமருதில் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் கலாசார இலக்கிய பெரு விழா

(பொலிவேரியன் நிருபர் – எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை ஆகியன இணைந்து நடாத்திய 2021 ஆம் ஆண்டின் கலாசார இலக்கிய விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23) மாலை சாய்ந்தமருது கமு/கமு/அல் – ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். ஷபீகாவின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான எம்.எம்.ஆசிக்கின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும் கௌரவ அதிதிகளாக கணக்காளர் திருமதி என்.பி.எம். லரீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் மற்றும் விசேட அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் மற்றும் சிறப்பு அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர், சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன், கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், கலாசார அதிகார சபையின் செயலாளர் கே.எம்.ஏ. அஸீஸ், கலாசார அதிகாரசபையின் பொருளாளர் எஸ்.எம். அஸ்வான் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு, சாய்ந்தமருது மண்ணுக்கு பெருமை சேர்த்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அதிதிகள் புடை சூழ பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பொல்லடி, சிலம்பாட்டம், றபான், கவிபாடுதல், போன்ற நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் அரங்கேறியதோடு, சிறுவர்களின் குறுப்புத்தனமான நிகழ்ச்சிகளும் சபையோரை வெகுவாகக் கவர்ந்து பரவசத்தில் ஆழ்த்தினர்.
இந்நிகழ்வில், இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுகள், வெற்றிக்கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் எனப் பல தரப்பட்டோரும் கலந்து  கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.