முஷாரப் எம்.பிக்கும் கட்டார் வாழ் புத்தளம் மக்களுக்குமிடையில் சந்திப்பு.

(நூருல் ஹுதா உமர்) கட்டாருக்கு பிரத்தியேக விஜயம் செய்துள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்புக்கும், கட்டாரில் வாழ்கின்ற புத்தளம் பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடை யிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (22) தோஹாவில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் சமூக நல செயற்பாட்டாளர் இஷாம் மரிக்காரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, சர்வதேச உறவுகளுடன் இலங்கை தேசிய அரசியல் மற்றும் சிறுபான்மை அரசியலின் தற்போதைய நிலைமை, குறிப்பாக சிறுபான்மை அணிகளின் தலைமை, அவர்களது பணி மற்றும் தொலைநோக்கு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவர்களின் இருப்பின் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக புத்தளம் பிரதேச அருவக்காடு குப்பைத்திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள்  முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது.

அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் அரசோடு கொண்டிருக்கும் நிலைப்பாடு பற்றிய தெளிவை பெற்றெடுக்க முயற்சித்தாலும், அது ஒரு தெளிவில்லாத அம்சமாகவே இருந்தது. ஆனாலும் நம் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் அவரின் அதிகாரங்களை நம் சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளவும், அவரை சரியான திசையில் பயணிக்க வைப்பதற்கும் தான் முயற்சிப்பதாக கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் ஒருசிலரின் வேண்டுகோளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் புத்தளம், கல்பிட்டி, கரைத்தீவு பிரதேச இளைஞர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.