(த.சுபேசன்)2022ஆம் ஆண்டினை நாவலர் ஆண்டாக பிரகடனப்படுத்தி சமய சக வாழ்விற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வித்திட்டுள்ளார் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சைவத்தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது பிறந்த ஆண்டான 2022ஆம் ஆண்டினை “நாவலர் ஆண்டாக” பிரகடனம் செய்ய அங்கீகாரம் வழங்கியமையை இட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி பாராட்டி வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அவர் மேலும் தனது அறிக்கையில்;இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கியதன் ஊடாக நாட்டில் சமய சக வாழ்வு மலர பிரதமர் வித்திட்டுள்ளார்.1822ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த நாவலர் பெருமான் சைவத் தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி ஆவார்.சிறுபராயத்திலேயே சிவாகமங்கள், சாஸ்திரங்கள் கற்றுத்தேர்ந்த நாவலர் பெருமானின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்து சமய,கலாசார திணைக்களம் தீர்மானித்து அந்த தீர்மானத்திற்கு பிரதமர் அங்கீகாரம் வழங்கியமை நாவலர் பெருமானுக்கு கிடைத்த அங்கீகாரம் மாத்திரமல்ல;ஒட்டுமொத்த சைவத்தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.நாவலர் ஆண்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவலர் பெருமானின் வரலாற்றுச் சாதனைகளை காட்சிப்படுத்தல், நாவலர் பெயரில் வீதிகள் அமைத்தல்,நாவலரின் நூல்களை மீள் பதிப்புச் செய்தல்,நாவலர் ஞாபகார்த்த விருது வழங்கல் உள்ளிட்ட பல செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.எனவே நாவலர் ஆண்டு சைவத் தமிழ் வளர்ச்சியின் மறுமலர்ச்சிக் காலமாக அமையும் என நம்புகிறேன்.அந்த வகையில் சைவத் தமிழ் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.