நூருல் ஹுதா உமர், நாஸிக் பதுர்தீன்
கல்முனை கல்வி வலய காரைதீவு கோட்டத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் அஸ்மியின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் பாடசாலையின் EPSI இணைப்பாளரும் ஆசிரியர் ஆலோசகருமாகிய ஏ. சஹரூன், பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வின் போது 2021இல் புலமைப்பரிசில் பரீட்சை எழுத காத்திருக்கும் மாணவர்களும் பாராட்டபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை போன்று சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் கீழுள்ள சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வருடம் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக முன்னோடிப் பரீட்சை ஒன்றை ஏற்பாடு செய்து அதில் 170 க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 27 மாணவர்களை இனம் கண்டு அவர்களை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் மற்றும் தரம் 3,4,5 பிரிவுகளில் 1ம், 2ம், 3ம் நிலைகளைப்பெற்ற மாணவர்களை உட்சாகப்படுத்து முகமாகவும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸின் தலைமையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரிய ஆசிரியைகளும், பட்டதாரி பயிலுனர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.