அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நீதவான் வீட்டில் தங்க நகை கொள்ளை.சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள்

வி.சுகிர்தகுமார் 

  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் நீதவான் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற தங்க நகை கொள்ளை சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தால் குறித்த பிரதேசம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் நீதிபதியாக கடமையாற்றும் அக்கரைப்பற்று 8/1 முதலியார் வீதியில் வாழும் குறித்த நீதிபதியின் மனைவியின் சுமார் 11 – 1/2  புவண் மதிக்கத்தக்க தாலி கொடியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் கொள்ளையிட்டவரை மடக்கிப்பிடிக்க எத்தனித்த நீதவானும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இன்று (18) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நீதிபதிகள் மற்றும் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட  அரச உயர் அதிகாரிகள்
உயர்மட்ட பொலிசார், இராணுவத்தினர் புலனாய்வு பிரிவினர் என பல்வேறு தரப்பினரும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை பல்வேறு கோணங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
குறித்த வீட்டில் நீதவான் மற்றும் மனைவி பிள்ளைகள் உறக்கத்தில் இருந்த அதிகாலை நேரம் இரண்டு மணியளவில் வீட்டின் மேல்தட்டு ஐன்னல் கிரிலை உடைத்து அதன் வழியாக உள்நுழைந்த திருடன் படுக்கை அறையில் தூக்கத்தில் இருந்த நீதவானின் மனைவியின் தாலியை அறுத்து எடுத்துள்ளான்.
இந்நிலையில் தாலி அறுக்கப்படுவதை சடுதியாக உணர்ந்த மனைவி சத்தம்போடவே கண்விழித்துக்கொண்ட நீதவான் கொள்ளையனை மடக்கிப்பிடிக்க போராடியுள்ளார்.  ஆயினும் கொள்ளையிட்டவன் நீதிவானின் காலில் கம்பி ஒன்றால் தாக்கியதுடன் கையிலும் பலமாக அடித்துள்ளான். இதனால் நீதவான் காலிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் 10 நிமிடங்கள் வரை இடம்பெற்ற நிலையில் கணவன் தாக்கப்படுவதை உணர்ந்த மனைவி கள்வனோடு சண்டையிட்டு அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கள்வன் தாலியுடன் ஏற்கனவே திறந்து வைத்திருந்த கதவின் ஊடாக தப்பித்து சென்றுள்ளான்.
இந்நிலையில் உடன் விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் தகவல்களை உயர் மட்டங்களுக்கு அறியக்கொடுத்த நிலையில் உயர் மட்ட பொலிஸ் அரச அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிசார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளை சம்மந்தமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த இரு வெள்ளிக்கிழமைகளில் குறித்த நேரத்தில் இதுபோன்ற இரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் மூன்றாவதாக நடைபெற்றுள்ளமை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.