இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்களை பாதுகாப்பாக மீள ஒருங்கிணைத்தல் தொடர்பான செயலமர்வு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்களை பாதுகாப்பாக மீள சமூகத்துடன் ஒருங்கிணைத்தல் தொடர்பான செயலமர்வானது 15.12.2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தில் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் யாழ் பிராந்திய (OFERR CEYLON JAFFNA) ஏற்பாட்டில் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் தலைவி செல்வி S.சூரியகுமாரி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் காணி மற்றும் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு தொடர்பான முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகளான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் UNDP மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UNHCR ஆகிய அமைப்புகளின் யாழ் பிராந்திய உத்தியோகத்தர்கள் ஆகியோரது ஒன்றினைவோடு காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.40 மணி வரை நடைபெற்றது.
இச் செயலமர்வில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் சமூகத்தில் மீள ஒருங்கிணையும் போது எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்களான பாதுகாப்பு, அச்சுறுத்தல், நலிவுத்தன்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுபட்டு எவ்வாறு மக்களை நிலையாக மீள ஒருங்கிணைப்பு செய்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சுயகௌரவம் மிக்க குடிமகனாக வாழ வைப்பது என்பது தொடர்பாக சமூக மட்டத்தில் கண்டிருந்த அனுபவங்கள் தேவைகள் என்பவை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் கலந்துரையாடல் செய்யப்பட்டது.
அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் எவ்வாறு கூட்டாக ஒன்றிணைந்து நாடு திரும்புகின்ற மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை எ
வ்வாறு தீர்த்து வைக்கலாம் என்பது தொடர்பாகவும் இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாடு திரும்பிய மக்களினுடைய ஆவணம் சார் பிரச்சனைகள் மற்றும் வாழ்வாதாரம் வீடமைப்பு என்பவற்றுக்கான உடனடி தீர்வுகள் மற்றும் நிலையான தீர்வுகள் என்பன தொடர்பாகவும் இச் செயலமர்வில் கலந்து ஆலோசிக்கப்பட்டது
இச்செயலமர்வானது எதிர்காலத்தில் இந்தியாவில் அகதிகளாக இருந்து நாடு திரும்பவுள்ள மக்களுக்கும் நீண்ட காலம் இந்தியாவிலே வாழ்ந்து நாடு திரும்பிய மக்களுக்கும் பயன்மிக்கதொரு செயலமர்வாக அமைந்திருந்தது.