சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்யா வாரத்தினை முன்னிட்டு உற்பத்திசார் அங்குரார்ப்பண வைபவம்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

சௌபாக்யா வாரத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் சுயதொழில் சந்தைவாய்ப்புக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (17) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் தெலுங்கு நகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில்  இடம் பெற்ற இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உற்பத்தி திறனை மேம்படுத்தியமைக்கான சௌபாக்கியா அங்கத்துவ  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள கலந்து சிறப்பித்தார்.  புதுக்குடியிருப்பு , பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஊதுபத்தி,நிலக்கடலை ஆகிய உற்பத்திசார் பொருட்கள் இதன் போது சந்தைப்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஊது பத்தி உற்பத்தியாளர் ஒருவரின் இல்லத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் உற்பத்தி இயந்திரம் அதன் தயாரிப்பு சந்தைப்படுத்தல் தொடர்பிலும் பயனாளியிடம் கேட்டறிந்து கொண்டார். ஊது பத்தி உற்பத்தி பயனாளிகளாக 36 பேர்களும், நிலக்கடலை உற்பத்தி தொடர்பில் 40 பேர்களும் தெரிவு செய்யப்பட்டு இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  பொருளாதார ரீசியாக கஷ்டங்களை எதிர் நோக்கிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இதன் போது தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது தங்களுக்கான இந்த வாழ்வாதாரத்தினை மேம்படுத்தியமைக்கு உதவி செய்த அரசாங்கத்துக்கு பயனாளி ஒருவர் நன்றிகளையும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் சக உத்திதோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.