பா.உ ஜனா மற்றும் கலையரசன் உள்ளிட்டோருக்குப் பிணை

(சுமன்)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் ஜனா மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் பொலிஸாரினால் பெறப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்து கொண்டமை தொடர்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்டோர் மீது திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய தினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற அழைப்பாணையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, சமூக செயற்பாட்டாளர் பிரதீபன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சயனொளிபவன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அவர்கள் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.