அரச ஊழியர் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரச சேவை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தமது சங்கம் உட்பட முன்னணி தொழிற்சங்கங்கள் பல கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதனால் சுற்றறிக்கை வெளியிடுவதில் பொது நிருவாக அமைச்சு சவாலை எதிர்நோக்கியிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக சேவை கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

நிறைவேற்றப்பட்டுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிப்பட்டிருக்கிறது. இத்தீர்மானத்தை இலங்கை நிருவாக சேவை சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் மற்றும் உயர் தொழில் புரிவோர் தொழிற் சங்கமும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இவ்வெதிர்ப்பு காரணமாக பொது நிருவாக அமைச்சு குறித்த விடயம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவதில் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

இவற்றை மீறி வயதெல்லை அதிகரிக்கப்பட்டால் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்படுமென எச்சரித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை அறிவிக்க முன்னர் தொழில் சங்கங்களுடன் எவ்வித கருத்து பரிமாற்றத்தையும் செய்யாமல் தீர்மானமொன்றை மேற்கொண்டதன் மூலம் அரச சேவையின் கீர்த்தி பாழடிக்கப்படுகின்றது.

அரச சேவை நாட்டுக்கு சுமை என அறிவித்த நிதியமைச்சர் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்து அரச அலுவலகங்களை வயோதிபர் மடமாக்க முயற்சிக்கின்றாரா எனவும் இதன் பின்னணியில் அரச சேவையை தனியார் மயமாக்கும் நோக்கம் இருக்குமோ எனவும் சந்தேகங்கள் எழுகின்றன.

இதேவேளை அரச சேவை நாட்டிற்கு சுமை என நிதிஅமைச்சர் தெரிவித்த கருத்து வாபஸ் பெறப்பட வேண்டும் என தொழில் சங்கங்களால் கோரப்பட்ட போதிலும் அவர் அதனை இன்னும் வாபஸ் பெறாதிருப்பதானது அரச சேவையை  அவமானப்படுத்துகின்ற அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றாரா என இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் கேள்வி எழுப்புவதாகவும் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.