காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!

( வி.ரி.சகாதேவராஜா) தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்ந்த காரைதீவு பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டு(2)மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

காரைதீவு பிரதேசசபையின் 3வது சபையின் 46ஆவது மாதாந்த அமர்வும் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான அமர்வும் நேற்று(12) சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்ந்த காரைதீவு பிரதேசசபையில் மொத்தமாக 12உறுப்பினர்கள் உள்ளனர். அவர்னளில் ஏழுதமிழ்உறுப்பினர்களும் ஜந்து முஸ்லிம்உறுப்பினர்களும் அங்கம்வகிக்கின்றனர்.

வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 7வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆதலால் 2மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத்திட்டம் வெற்றிபெற்றது.

காலை 10மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில் தவிசாளர் உரையைத்தொடர்ந்து 11உறுப்பினர்களினதும் வரவுசெலவுத்திட்ட கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

அதன்பின்பு 12மணியளவில் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தவிசாளர் கி.ஜெயசிறில் முன்மொழிந்தார். அதனை ஸ்ரீல.மு.காங்கிரசின் மூத்தஉறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் வழிமொழிந்தார். எதிர்ப்புகள் இருக்கிறதா எனக்கேட்டபோது உப தவிசாளர் எ.எம்.ஜாகீர் எதிர்ப்பதாக கூறினார்.

அதனையடுத்து வாக்கெடுப்பிற்கு தவிசாளர் பணித்தார்.சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தார். பகிரங்கவாக்கெடுப்பாக நடாத்தப்படவேண்டும் என ஏனமனதாக தீர்மானிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களான கி.ஜெயசிறில்(தவிசாளர்) ச.நேசராசா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், என் . எம்.எம்.றனீஸ், காரைதீவு சுயேச்சைக்குழு உறுப்பினர் சதாசிவம் சசிகுமார் ஆகியோர் வாக்களித்தனர்.

எதிராக ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி உறுப்பினர்களான எ.எம்.ஜாகீர்(உபதவிசாளர்) , கே.ஜெயதாசன் ,சுயேச்சைக்குழு உறுப்பினர்களான எ.ஆர்.எம்.பஸ்மீர் ,கே.குமாரசிறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.ஜலீல் ஆகியோர் வாக்களித்தனர்.

அதன்படி ஆதரவாக 7வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆதலால் 2மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத்திட்டம் வெற்றிபெற்றது. அதனையடுத்து தவிசாளரின் பதிலுரை இடம்பெற்றது.

சபையில் பார்வையாளர்களாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுயுமன்ற உறுப்பினர் த.கலையரசன், கல்முனைமாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் ,முன்னாள் காரைதீவு பிரதேசசபைஉறுப்பினரான எம்.காண்டீபன் ,கனடா சமுகசெயற்பாட்டாளர் மதி ,மு.கா.மாளிகைக்காடு அமைப்பாளராக எம்.எச்.எம்.நாசர், மதியுரைக்குழஉறுப்பினர்கள் வெ.ஜெயகோபன், ச.சுரேஸ்குமார் ஆலயதர்மகர்த்தாக்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சமகாலத்தில் சபைக்கு வெளியே ஆதரவாளர்கள் பாரிய பட்டாசுகளை வெடிக்கவைத்து வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.சுகாதாரநடைமுறைக்கமைவாக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் பிரிதிநிதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.