அலிக்கம்பை கிராமத்திற்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா நிதி-ஆடுவளர்ப்பு திட்டம் அமுல்

வி.சுகிர்தகுமார்

 அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா உற்பத்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அலிக்கம்பை கிராமத்திற்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதி மூலம் ஆடுவளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக குறித்த திட்டத்திற்காக கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுவளர்ப்பு திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வி;ல் தேவாலயத்தின் அருட்தந்தை அருள்ராஜா அடிகளார் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னராக கருத்துரைத்த பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஜனாதிபதியின் சிந்தனைக்கமைவாக அலிக்கம்பை கிராமத்தை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து அங்கு காணப்படும் வளங்களை பயன்படுத்தி குறித்த ஒரு உற்பத்தியை ஊக்குவித்து அதன் ஊடாக அக்கிராமத்தை தேர்ச்சி பெற்றதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
மேலும் குறித்த அபிவிருத்தி திட்டத்தினை மக்கள் முறையாக பயன்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து ஆலையடிவேம்பு கால்நடை வைத்திய அதிகாரி திருமதி ரி.கோகுலதாஸ் ஆடுவளர்ப்பு தொடர்பான வைத்திய ஆலோசனைகளை வழங்கினார்.
ஆடுவளர்ப்பு தொடர்பிலான தொழில் நுட்ப அறிவுரைகளை கால்நடை   அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.கிபார் எடுத்துரைத்தார். அத்தோடு பயனாளிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன்  உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் ஏற்பாட்டில் இத்திட்;டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.