பாக்கிஸ்தானில் ஒரு உயிர் பறிக்கப்பட்டதுக்கு அரசு குரல் கொடுப்பதுபோல் ஏன் பறித்தெடுக்கப்பட்ட உயிர்களுக்கு மௌனம். மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கேள்வி.

( வாஸ் கூஞ்ஞ)

பாக்கிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த ஒரு உயிரை தீயூட்டியது எமக்கு பெரும் கவலையை உண்டுபண்ணியுள்ளது. அதற்காக இந்த அரசு குரல் கொடுக்கின்றது. இரு பிள்ளைகளின் தந்தைக்கு குரல் கொடுப்பதுபோல எங்களிடமிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது பல உறவுகளுக்காக இந்த அரசும் உலக நாடும் ஏன் பாராமுகமாக இருக்கின்றது என மன்னாரில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தினத்தின்போது இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

10 ந் திகதி வெள்ளிக்கிழமை (10.12.2021) சர்வதேச மனித உரிமைகள் தினம். இவ் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது இதன்போது இங்கு தெரிவிக்கப்பட்டதாவது.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவினர்களுக்காக நாங்கள் போரடி பல நாட்கள் கடந்தும் இன்னும் இதற்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

உலகம் இப்பொழுது எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவினர்களுக்காக வீதிகளில் நிற்கின்றோம். ஆனால் இந்த உலகம் எங்களை திரும்பி பார்க்காமலே இருக்கின்றது.

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை ஒருவரை எரித்தது எங்களுக்கு மன வேதனையை தந்துள்ளது. அதுவும் எங்கள் நாட்டு பிரஜைக்கு நடந்தது எங்களுக்கு பெரும் கவலையை உண்டுபண்ணியுள்ளது.

இன்று இது தொடர்பாக இரு நாடுகளும் தங்கள் கவனத்தை இதன்பால் ஈர்த்து நிற்கின்றது.

அதேநேரத்தில் நாங்கள் கணவன்மாரை பிள்ளைகளை உறவினர்களை எல்லோரையும் இழந்த நிலையில் வீதியில் நிற்கின்றோம்.

அரசு பாக்கிஸ்தானில் இறந்த ஒரு உயிருக்காக நீதி கேட்டு நிற்பதுபோல ஏன் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட உயிர்களுக்கான நீதியை இன்னும் காண்பிக்காது இருக்கின்றது என இங்கு கேட்டு நிற்கின்றோம்.

நாங்கள் தமிழர் என்பதால் இவ் நீதி மறுக்கப்படுகின்றதா இரண்டு பிள்ளைகளின் தந்தைக்காக குரல் கொடுக்கும் அரசானது பல உயிர்களை பறிகொடுத்திருக்கும் எங்களை இந்த அரசும் இந்த உலகமும் ஏன் திரும்பி பார்க்காது இருக்கின்றது

13 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும் எங்களை அந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டும். உயிர் என்பது எல்லாமே உயிர்தான் என இந்த உலகமும் அரசும் சிந்திக்க வேண்டும் என இவ்வாறு இவ் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.