46வது கிழக்கு மாகாண விளையாட்டு விழா திருமலையில் ஆரம்பம்.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் 
46வது கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டி நிகழ்வுகள் இன்று(10) கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் ஆரம்பமானது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்து கொண்டதுடன் போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான பிரகடனமும் இதன்போது பிரதம செயலாளரால் வாசிக்கப்பட்டது.

விளையாட்டு மூலம் உடல் மற்றும் உள ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவதுடன்  தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும். கிராமிய விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் கிராம பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பிரதேச மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான பங்குபற்றுதல் குறைவாக உள்ளது. கிராமிய விளையாட்டு துறையை மேம்படுத்தி கிராமத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுடைய திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலே திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கக் கூடியதாக அமையும்.
சிறந்த பயிற்சியாளர்கள், நடுவர்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றனர். எனவே உரிய பயிற்சி மற்றும் தேவையான வசதி வாய்ப்புகளை வழங்கி அவர்களை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் காணப்படுகின்றது. குறுங்கால நீண்டகால திட்டங்களை வடிவமைத்து விளையாட்டு துறையை  மேம்படுத்த வேண்டும் என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் விளையாட்டு மைதான அபிவிருத்தி மற்றும் கிராமிய விளையாட்டு துறை தொடர்பில் கூடிய கரிசனை கொண்டு செயற்பட்டு வருவதாகவும் இதன் போது பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
விளையாட்டு மூலம் ஒற்றுமை ஏற்படுவதுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல்.பெர்ணான்டோ ,மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துப்பண்டா, முதலமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.யு.ஜலீல், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்(நிருவாகம்)எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க ,மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். பிள்ளைநாயகம் உட்பட பிரமுகர்கள் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.